போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ புலிகளின் பிடியில் இருந்த இராணுவத்தினரைக் கொல்வதற்கு உதவியதுடன் அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்தார் என்றே குறித்த உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஜெர்மனி சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவிக்கின்றது.
பி.சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜேர்மனியின் டுசெல்ட்டோவ் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில் ஜேர்மனியின் தனியுரிமை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
போர்க்குற்றம் இழைத்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பில் அங்கம் வகித்தார் என்ற அடிப்படையிலுமே இவர் கைது செய்யப்பட்டதாக ஜேர்மனி சட்ட மா அதிபர் திணைக்களம் கூறுகின்றது.
2006ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த இவர் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 16 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் என்றும் கொலைக் களத்திற்கு இராணுவத்தினர் கொண்டு செல்லப்படுவதற்கு சிவதீபன் பாதுகாப்பு அளித்தமை, கைதிகளாக இருந்த படையினர் கொல்லப்படும் இடத்தில் இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சிவதீபன் மீது சுமத்தப்பட்டுள்ளது.