அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 வயது சிறுவன் ஆன்லைன் விளையாட்டு விளையாடுகையில் தன்னுடன் விளையாடிய நபருக்கு தனது தாயின் தனிப்பட்ட விவரங்களை அனுப்பியுள்ளார்.
சார்லி பியர்சன் என்ற சிறுவன் ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவன். வேறு நபர்களை பார்ட்னராக வைத்துக்கொண்டு விளையாடும் சிறுவன், வழக்கம்போல ஒரு நபருடன் விளையாடிக்கொண்டிருக்கையில், இச்சிறுவனின் தாய் குறித்த தகவல்களை அந்நபர் கேட்டுள்ளார்.
அப்போது ஓட்டுனர் உரிமம், விசா, டெபிட் கார்ட் நெம்பர் ஆகியவற்றை கேட்டுள்ளார். இச்சிறுவனும் அவை அனைத்தையும் புகைப்படம் எடுத்து அந்நபருக்கு அனுப்பியுள்ளார்.
வெளியில் சென்று வீடு திரும்பிய தாய், தனது கார்டுகள் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், தனது மகன் விளையாடிய கணினியை சோதனை செய்து பார்த்தபோது, தனது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் புகைப்படமாக எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்ததை அறிந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினரிடத்தில் புகார் அளித்துள்ளார். இப்பெண்ணின் தகவல்களை வைத்து அந்நபர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் இருந்து கூறியுள்ளனர்.